பா.ஜ., - காங்கிரஸ் கைகோர்ப்பு பஞ்சாப் அமைச்சர் குற்றச்சாட்டு
பா.ஜ., - காங்கிரஸ் கைகோர்ப்பு பஞ்சாப் அமைச்சர் குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 12, 2025 08:50 PM

சண்டிகர்:“பஞ்சாபில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இரண்டும் கைகோர்த்துள்ளன,” என, ஆம் ஆத்மியைச் சேர்ந்த நிதி அமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறினார்.
பஞ்சாப் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவருமான பிரதாப் சிங் பஜ்வா கொடுத்த புகார்படி அமைச்சர்கள் ஹர்பால் சிங் சீமா மற்றும் அமன் அரோரா ஆகியோர் மீது, சண்டிகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஹர்பல் சிங் சீமா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா புகார் கொடுத்த, 24 மணி நேரத்துக்குள், சண்டிகர் போலீசார் இரு அமைச்சர்கள் மீது விசாரணை கூட நடத்தாமல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விஷயத்தில் சண்டிகர் போலீசார் எவ்வளவு விரைவாக செயல்படுகின்றனர் என்பதைப் பாருங்கள். உண்மையைச் சொல்ல நாங்கள் பயப்படவில்லை. ஆனால் இதன் வாயிலாக, பா.ஜ.,வுடன் காங்கிரஸ் கைகோர்த்து செயல்படுவது தெளிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிரோமணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் சிங் மஜிதியா, ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதை விமர்சித்து, பிரதாப் சிங் பஜ்வா, சமூக வலைதளத்தில், 'வீடியோ' ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோவை ஆம் ஆத்மி தலைவர்கள், திருத்தம் செய்து தன்னை அவதுாறு செய்யும் வகையில் பரப்பி வருவதாக, சண்டிகர் போலீசில் பஜ்வா நேற்று முன் தினம் புகார் செய்தார்.
இதையடுத்து, சண்டிகர் சைபர் கிரைம் போலீசார், அமைச்சர்கள் ஹர்பால் சிங் சீமா மற்றும் அமன் அரோரா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.