பள்ளி, கல்லுாரிகள் நாளை திறப்பு பஞ்சாப் அமைச்சர் அறிவிப்பு
பள்ளி, கல்லுாரிகள் நாளை திறப்பு பஞ்சாப் அமைச்சர் அறிவிப்பு
ADDED : செப் 08, 2025 01:41 AM

சண்டிகர்:“பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் நாளை மீண்டும் திறக்கப்படும்,” என, கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறினார்.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், மாநிலம் முழுதும் படிப்படியாக மழை குறைந்து வருகிறது. இதையடுத்து, பள்ளி, கல்லுாரிகளை திறக்க அரசு முடிவு செய்தது.
இதுகுறித்து, பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் நேற்று கூறியதாவது:
பஞ்சாபில், 10 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
மேலும், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் பெய்த கன மழையால் சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பஞ்சாப் மாநிலமும் வெள்ளத்தில் மூழ்கியது.
இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாநிலம் முழுதும் தற்போது படிப்படியாக மழை குறைந்து வருகிறது.
எனவே, அனைத்துப் பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகள் நாளை மீண்டும் திறக்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லுாரிகள் இருந்தால், அதை திறக்கும் தேதி குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆசிரியர்கள் முழுமையாக ஆய்வு செய்து, ஏதேனும் குறைபாடு இருந்தால் மாவட்ட பொறியியல் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அவர்கள் சீரமைப்புப் பணிகளை செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.