பஞ்சாப் பல்கலையில் மாணவர்கள் போராட்டம்: மாநில அரசை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்
பஞ்சாப் பல்கலையில் மாணவர்கள் போராட்டம்: மாநில அரசை கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்
ADDED : செப் 28, 2026 04:52 PM

சண்டிகர்:பஞ்சாபில் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த மாநில அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. தேர்வு ஒத்திவைக்கப்பட்டதுடன்,, பல்கலைக்கு 10 நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பஞ்சாபின் லவ்லி புரொபஷனல் பல்கலை மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி தற்கொலை செய்ததாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. சில மாணவர்கள், பல்கலையில் இருந்த மிக் 23யுஎம் போர் விமானம், ராணுவ டாங்கிகள் மீது ஏறி போராடினர். போராட்டம் வன்முறையாக மாறியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை பல்கலை நிர்வாகம் மறுத்தது. மேலும், பல்கலைக்கு 10 நாள் விடுப்பு அளித்து, தேர்வுகளையும் ஒத்திவைத்தது. விடுதியில் உள்ள மாணவர்கள், வீடுகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டது.
இச்சம்பவங்கள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு முதல்வர் பக்வந்த் மான் உத்தரவிட்டார்.
சிரோன்மணி அகாலிதளம் கட்சித் தலைவர் சுக்பிர் சிங் பாதல் கூறுகையில், பல்கலையில் வாக்கி டாக்கி, ஆயுதங்களுடன் பலர் சென்றது எப்படி. கல்வி நிறுவனத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வெளியாட்கள். இதன் பின்னணியில் சதி உள்ளது. மாநில அரசின் முறைகேடு, அமலாக்கத்துறை சோதனையை திசைதிருப்ப இந்த விஷயம் பெரிதுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ரவ்நீத் பிட்டு,'' அரசியல் சர்ச்சையை திசைதிருப்ப பல்கலை விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டது. பாஜ வளர்ச்சியை மாநில அரசால், ஏற்றுக் கொள்ள முடியவில்லை'' என்றார். பக்வந்த்சிங் மான் அரசை, காங்கிரசும் விமர்சித்தது.
