ADDED : ஜன 26, 2025 10:58 PM

பொம்மலாட்டத்தில் சிறந்து விளங்கும் மூத்த கலைஞர் பீமவ்வாவுக்கு மத்திய அரசு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்துள்ளது.
இன்றைய அதிநவீன யுகத்தில், பல கிராமிய கலைகள் நலிவடைந்துள்ளன. இளம் தலைமுறையினருக்கு, கிராமிய கலைகள், விளையாட்டுகள் பற்றி தெரிவது இல்லை. இத்தகைய சூழ்நிலையிலும், கொப்பாலின் ஷிள்ளேகியாதா என்ற குடும்பத்தினர், வம்சா வழியாக பொம்மலாட்டத்தை போற்றி பாதுகாக்கின்றனர். இந்த குடும்பத்தை சேர்ந்த மூத்த கலைஞர் ஒருவர் 'பத்மஸ்ரீ' விருது பெற்று, கலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
கொப்பாலின், இடகல்லகடாதா ஹனுமஹட்டி கிராமத்தை சேர்ந்த சஞ்சீவப்பா, ஹொளயம்மா தம்பதியின் மகள், தன் 14வது வயதில், மொரநாளா கிராமத்தை சேர்ந்த தொட்டபாளப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தொட்ட பாளப்பா அப்போதே, பொம்மலாட்டத்தில் பிரசித்தி பெற்றிருந்தார்.
இந்த கலையை சிறு வயதில் இருந்தே, கணவரிடம் பீமவ்வா ஆர்வத்துடன் கற்று கொண்டார். நிகழ்ச்சிகளையும் நடத்தினார். தம்பதிக்கு விருபாக்ஷப்பா, யங்கப்பா, கேசப்பா என, மூன்று மகன்கள் உள்ளனர். இம்மூவர் மட்டுமின்றி, மருமகள்களும் பொம்மலாட்டம் கற்று கொண்டனர். பேரப்பிள்ளைகளும் இக்கலையை கற்று தேர்ந்துள்ளனர். தற்போது கொள்ளு பேரப்பிள்ளைகளும் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். பீமவ்வா குடும்பத்தின் நான்காவதுதலைமுறை கலைஞர்கள் உள்ளனர்.
பீமவ்வாவுக்கு தற்போது 103 வயதாகிறது. இவர் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பொம்மலாட்டம் நடத்தி, கை தட்டல் வாங்கியுள்ளார். இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்ற கணவரின் கலைக்குழுவில், பீமவ்வாவும் இடம் பெற்று பொம்மலாட்டம் நடத்தினார்.
பீமவ்வா நல்ல குரல் வளம் கொண்டவர். அற்புதமாக பாடுவார். கொப்பாலின் குக்கிராமத்தை சேர்ந்த இவர், கிராமிய கலையை வெளி நாட்டிலும் பரப்பினார். இப்போதும் 200 ஆண்டுகள் பழமையான பொம்மைகளை பாதுகாத்து வைத்துள்ளார். பொம்மைகள் தயாரிப்பது, வர்ணம் பூசுவது, பொம்மைகள் தயாரிக்க மான் தோலை பதப்படுத்துவதும் நன்றாக தெரியும். தன் பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப்பிள்ளைகளுக்கும் கற்று தருகிறார்.
ஆனால், தற்போது மான் தோல் பற்றாக்குறை உள்ளதால், பொம்மைகள் தயாரிப்பதில்லை. புதிய பொம்மைகள் தேவையென்றால் ஆந்திராவின், ஆனந்தபுரா, தர்மாவரம், ஹிந்துப்பூருக்கு சென்று, அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
நம் நாட்டின் பாரம்பரிய கலையான பொம்மலாட்டத்தை, வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்ற பீமவ்வாவுக்கும், அவரது கணவருக்கும் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் விருது கொடுத்து கவுரவித்தன. தற்போது பீமவ்வாவின் சாதனையை அடையாளம் கண்டு, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது
- நமது நிருபர் -.

