பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான திறவுகோல்: தலைமை தேர்தல் கமிஷனர்
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான திறவுகோல்: தலைமை தேர்தல் கமிஷனர்
UPDATED : ஜன 21, 2026 03:49 PM
ADDED : ஜன 21, 2026 03:43 PM

புதுடில்லி: பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான திறவுகோல் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற சர்வதேச தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தொடக்க அமர்வில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசியதாவது;
இந்தியாவில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தோராயமாக 970 வாக்காளர்கள் உள்ளனர். தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு, வாக்குச் சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி நிலை அலுவலர், இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படைக் தூணாக உள்ளார்.
சட்டப்படி ஒவ்வொரு வாக்காளரையும் உள்ளடக்கிய பிழையில்லா வாக்காளர் பட்டியல் ஜனநாயகத்தையும், வாக்காளர் பட்டியலை கொண்டு நடத்தப்படும் அனைத்து தேர்தல்களையும் வலுப்படுத்த அவசியம் ஆகும்.
பீஹாரில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. அதில் தகுதியான வாக்காளர்கள் உட்பட, வாக்காளர் பட்டியலைத் சீர்திருத்துவது முதல் படியாக இருந்தது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தேர்தல் பதிவு அலுவலர்கள் மற்றும் பீஹாரின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் திறமையால், ஏழரை கோடி வாக்காளர்களில், மேல்முறையீடுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியமாக இருந்தது.
அதாவது, சிறப்பு தீவிர திருத்தப்பணியின் போது வாக்காளர்களை சேர்த்ததையோ அல்லது நீக்கியதையோ எதிர்த்து ஒரு புகார் கூட பதிவு செய்யப்படவில்லை.
பீஹார் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களின் கடுமையான கண்காணிப்புக்கு மத்தியில், வாக்காளர் பட்டியல்கள் இறுதி செய்யப்பட்டு, பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
பிழை இல்லாத வாக்காளர் பட்டியலே ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான திறவுகோல்.
இவ்வாறு தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பேசினார்.

