பட்டனை அழுத்தியும் மோட்டார் ஓடவில்லை: சித்து அப்செட்; அதிகாரி சஸ்பெண்ட்
பட்டனை அழுத்தியும் மோட்டார் ஓடவில்லை: சித்து அப்செட்; அதிகாரி சஸ்பெண்ட்
ADDED : ஜன 27, 2024 12:37 AM

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்த நீர்ப்பாசன திட்டவிழாவில் மோட்டாரை இயக்குவதற்காக பட்டனை அழுத்தியபோது, அது இயங்கவில்லை.
இது தொடர்பாக மாநில அரசின் மின் சப்ளை நிறுவன உயர் அதிகாரி அதிரடியாக 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இந்நிலையில் முதல்வரின் சொந்த மாவட்டமான மைசூரில் உள்ள பெரியபட்னா தாலுகாவை சேர்ந்த, 79 கிராமங்களில் உள்ள 150 ஏரிகளில் நீரை நிரப்புவதற்கான திட்ட துவக்க விழா சமீபத்தில் நடந்தது.
இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அப்போது, திட்டத்தை துவக்கி வைப்பதற்காக மோட்டார் பட்டனை முதல்வர் சித்தராமையா அழுத்தினார்.
ஆனால் பட்டன் செயல்படாததால் மோட்டார் இயங்கவில்லை. மாறி மாறி அழுத்தியும் பட்டன்கள் இயங்கவில்லை.
இது தொடர்பாக அரசுக்கு சொந்தமான சாமுண்டீஸ்வரி மின் வினியோக கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீதரை, மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
பணியில் அலட்சியமாக இருந்ததாக அவர் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.
சஸ்பெண்ட் உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் வருகையையொட்டி நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மின் சப்ளை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யும்படி ஸ்ரீதரை, மைசூரு துணை கமிஷனர் கடந்த 23ம் தேதி எழுதிய கடிதத்தில் அறிவுறுத்திஉள்ளார்.
ஆனாலும் சம்பவத்தன்று நிகழ்விடத்தில் இல்லாமல், அலட்சியமாக செயல்பட்ட ஸ்ரீதர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீதர் மீது துறை ரீதியிலான விசாரணையும் துவங்கிஉள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

