கவிதையாக ஒரு ராஜினாமா; கட்சி மாறுகிறார் லாலுவின் சீடர்
கவிதையாக ஒரு ராஜினாமா; கட்சி மாறுகிறார் லாலுவின் சீடர்
UPDATED : ஆக 23, 2024 05:33 PM
ADDED : ஆக 23, 2024 08:40 AM

பாட்னா: கவிதை போல ஒரு கடிதம் எழுதி விட்டு, கட்சிக்கு 'குட்பை' சொல்லி இருக்கிறார், லாலுவின் முன்னாள் சீடர் ஷியாம் ரஜாக். 'நான் சதுரங்கத்தை சிறப்பாக விளையாடியதில்லை; அதனால் தான் ஏமாற்றப்பட்டேன். நான் உறவை பேணிக் கொண்டிருந்தேன்; நீங்கள் காய்களை நகர்த்துகிறீர்கள்' என்கிறது அந்த ராஜினாமா கடிதம்.
இது பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஷியாம் ரஜாக் கட்சிக்கு எழுதிய கடிதம்.கட்சியின் தலித் முகமாக அறியப்பட்ட ஷியாம் ரஜக், ஒரு காலத்தில் லாலுவுக்கு மிக நெருக்கமான சீடராக இருந்தவர். ராப்ரி அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்தார்.
சீட் மறுப்பு
அவருக்கு கடந்த தேர்தலில் போட்டியிட்ட தேஜஸ்வி சீட் மறுத்து விட்டார். அதிருப்தியில் இருந்த ரஜாக், இப்போது கவிதை நடையில் ராஜினாமா கடிதம் அனுப்பி இருக்கிறார்.அவர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைய உள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.
6 முறை எம்.எல்.ஏ.,
ரஜாக், புல்வாரி பகுதியில் செல்வாக்கு வாய்ந்தவர். 6 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். நிதீஷ் கட்சியிலும் எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். லாலு செயல்பாடிழந்து, தேஜஸ்வி தலையெடுத்த நிலையில், ரஜாக்கின் செல்வாக்கு கட்சியில் கேள்விக்குறி ஆகிவிட்டது. வருத்தத்தில் இருந்த அவர், கட்சி மாற முடிவெடுத்து விட்டார் என்கின்றனர், விவரம் அறிந்தவர்கள்.
நிதீஷ் குமாருக்கு பாராட்டு
நிருபர்கள் சந்திப்பில், ஷியாம் ரஜக் கூறியதாவது: ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் சில துரோகம் செய்யப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்து கட்சியில் இருந்து விலகினேன். அதேநேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ் குமார் தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.