ADDED : டிச 07, 2025 06:10 AM

சென்னை:ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் கடுப்பான அமெரிக்க அதி பர் டிரம்ப், இந்தியா மீது, 50 சதவீத வரி விதித்துள்ளார். எனினும், இந்தியா - -ரஷ்யா உறவு மேம்பட்டுத்தான் உள்ளது. ரஷ்ய அதிபர் புடின் வருகையால், பலவித ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. குறிப்பாக, தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் ஆலைக்கு முழு ஆதரவு அளித்துள்ளார் புடின்.
ரஷ்ய ஆதரவுடன் செயல்படும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை, 'இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுசக்தி நிலையமாக மாற்றுவோம்' என உறுதி அளித்துள்ளார் அதிபர் புடின்.
இந்த அணுமின் நிலையத்தில், ஆறு அணு உலைகள் உள்ளன. தற்போது இரண்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ளன; இதில் ஒன்று, 2013லும், மற்றொன்று 2016லும் துவங்கப்பட்டன. மீதமுள்ள, நான்கு அணு உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
ஒரு உலை, 1,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டு அணு உலைகளும், 2,000 மெகாவாட் உற்பத்தி செய்கின்றன. ஆறு அணு உலைகளும் இயங்கினால், 6,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இப்படி, இந்த மின் நிலையம் முழுமையாக இயங்கினால், இந்தியாவின் மின் உற்பத்தி எங்கேயோ சென்று விடும்; தமிழகத்தில் மின் வெட்டு என்பதே இருக்காது.
'மூன்றாவது அணு உலைக்கான எரிபொருள், புடின் இந்தியா வருவதற்கு முன் இங்கு வந்து சேர்ந்துவிட்டது. விரைவில், இந்த மூன்றாவது அணு உலை பயன்பாட்டிற்கு வரும்' என சொல்லப்படுகிறது. துவக்கத்தில், இந்த மின் நிலையத்தை எதிர்த்து, வெளிநாட்டு ஆதரவுடன் எத்தனையோ போராட்டங்கள் நடந்தன; தற்போது எல்லாம் அமைதியாகி விட்டது.

