'வாட்ச்'சில் கியு.ஆர்.கோடு: ஆட்டோ டிரைவர் அசத்தல்
'வாட்ச்'சில் கியு.ஆர்.கோடு: ஆட்டோ டிரைவர் அசத்தல்
ADDED : செப் 22, 2024 11:31 PM

பெங்களூரு: வாட்ச்சில், 'கியு.ஆர்.கோடு' செட் வைத்து, பயணியரிடம் பணம் பெற்று, ஆட்டோ டிரைவர் அசத்துகிறார்.
ஒரு காலத்தில் கடைக்கு சென்றால் சில்லறை பிரச்னை, மக்களுக்கு பெரிய தலைவலியாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பின், டிஜிட்டல் இந்தியாவின் கீழ், 'போன் பே, கூகுள் பே, பே.டி.எம்., மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் சில்லறை பிரச்னை கணிசமாக தீர்க்கப்பட்டது.
இப்போது கடைக்கு செல்வோர் தங்கள் கைகளில், பர்ஸ் எடுத்து செல்வது இல்லை. போனை எடுக்கின்றனர்; ஸ்கேன் செய்கின்றனர். பணத்தை அனுப்பி விட்டு செல்கின்றனர். இதுபோல வாடகை கார், ஆட்டோக்களில் பயணம் செய்வோரும், கியு.ஆர்.கோடு ஸ்கேன் செய்து, கட்டணம் செலுத்துகின்றனர்.
இந்நிலையில் பெங்களூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர், தனது கையில் கட்டி இருக்கும் வாட்ச்சில், கியு.ஆர்.கோடு செட் செய்து உள்ளார். அவரது ஆட்டோவில் பயணிக்கும் பயணியர், பயணம் முடிந்ததும், வாட்ச்சில் உள்ள கியு.ஆர்.கோடை ஸ்கேன் செய்து, பணம் செலுத்துகின்றனர்.
இதை விஸ்வஜித் என்பவர், 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள், கமென்டுகள் குவிகின்றன. 'நவீன பிரச்னைக்கு நவீன தீர்வு, இது எங்கள் புதிய இந்தியா, இந்தியா இப்போது டிஜிட்டல் மயமாகிறது' என்று கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.