பீன்யா மேம்பாலத்தில் தரம் ஆய்வு பணி போக்குவரத்து நெரிசலால் கடும் பாதிப்பு
பீன்யா மேம்பாலத்தில் தரம் ஆய்வு பணி போக்குவரத்து நெரிசலால் கடும் பாதிப்பு
ADDED : ஜன 18, 2024 05:08 AM

பெங்களூரு: பெங்களூரு பீன்யா மேம்பாலத்தில் கடந்தாண்டு மேற்கொள்ளப்பட்ட பணியின் தரத்தை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆய்வு மேற்கொள்வதால், இந்த மேம்பாலம் மூடப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருடன் 18 மாவட்டங்களை இணைக்கும் துமகூரு சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான பஸ்கள், கனரக லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூரில் 'டாக்டர் சிவகுமார சுவாமிகள் மேம்பாலம்' என்று அழைக்கப்படும் பீன்யா மேம்பாலமானது, கோரகுண்டே பாளையாவில் இருந்து நாகசந்திரா வரை 4.5 கி.மீ., நீளமுள்ளது. இந்த மேம்பாலத்தில் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்ய, 2023ல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், 38.5 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணியை மேற்கொண்டது.
அதன் தரத்தை பரிசோதிக்க ஆணையம் திட்டமிட்டது. இதையடுத்து, நேற்று ஆய்வுப் பணிகள் துவக்கப்பட்டன. இதற்காக நேற்று முன்தினம் இரவு 11:00 மணி முதல் இப்பாலம் வழியே வாகனங்கள் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை நாளை காலை 11:00 மணி வரை நீடிக்கும்.
மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை காரணமாக நேற்று காலை வெளியூரில் இருந்து நகருக்கு வருவோரும், நகரில் இருந்து செல்வோரும் கடும் இன்னலுக்கு உள்ளாகினர்.
நெலமங்களா, தாசரஹள்ளி, ஜாலஹள்ளி கிராஸ் உட்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட துாரம் வரிசையில் நின்றிருந்தன. இதில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக் கொண்டன. நெரிசலில் இருந்து ஆம்புலன்ஸ் செல்ல பத்து நிமிடங்களுக்கும் மேலானது.
சர்வீஸ் சாலைகளிலும் நெரிசல் இருந்தது. இதனால் பலரும் தங்கள் அலுவலகங்களுக்கு தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ், ஆட்டோவில் சென்ற பயணியர் சிலர், நடந்தே செல்வதாக கூறி, சென்றனர்.
மேம்பால ஆய்வுப் பணிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்து போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நெலமங்களாவில் இருந்து கோரகுண்டேபாளையா வருவோர், தேசிய நெடுஞ்சாலை 4ல், சர்வீஸ் சாலையில் தாசரஹள்ளி, ஜாலஹள்ளி கிராஸ், பீன்யா போலீஸ் நிலையம், எஸ்.ஆர்.எஸ்., ஜங்ஷன் வழியாக வர வேண்டும்.
சி.எம்.டி.ஐ., ஜங்ஷனில் இருந்து நெலமங்களா செல்வோர், எஸ்.ஆர்.எஸ்., ஜங்ஷன், பீன்யா போலீஸ் நிலையம் ஜங்ஷன், ஜாலஹள்ளி கிராஸ், தாசரஹள்ளி, தேசிய நெடுஞ்சாலை 4 வழியாக செல்ல வேண்டும்.
மேம்பாலம் தரம் பார்ப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், இரு சக்கர வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலில் வேகமாக சந்து பொந்துகளில் புகுந்து செல்வதால், நாங்கள் மெதுவாக செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நாளை இந்த நிலை மாறும் என்று நினைக்கிறேன்.
- சந்திரேஷ்,
இலகுரக சரக்கு வாகன ஓட்டுனர், நெலமங்களா,
மேம்பாலத்தில் எடை பரிசோதிக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் பீன்யா, ஜாலஹள்ளி ஜங்ஷனில் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. பரிசோதனை பணி முடியும் வரை, இச்சாலைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். போக்குவரத்தை நிர்வகிக்க, மல்லேஸ்வரம், யஷ்வந்த்பூர், பீன்யா போலீஸ் நிலையத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
- ஸ்ரீகவுரி,
துணை போலீஸ் கமிஷனர், போக்குவரத்து காவல்