கேள்விக்குறியான 'ஷரங்' பீரங்கியின் தரம்; கொள்முதலை நிறுத்தியது ராணுவம்
கேள்விக்குறியான 'ஷரங்' பீரங்கியின் தரம்; கொள்முதலை நிறுத்தியது ராணுவம்
ADDED : செப் 17, 2025 03:11 AM

புதுடில்லி: 'ஷரங்' பீரங்கிகளின் தரம் கேள்விக்குறியாகி இருப்பதால், அவற்றை கொள்முதல் செய்வதை நம் ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.
எதிரிகளின் திடீர் தாக்குதலை சமாளிக்கும் வகையில், ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்தும் முயற்சியில், 2018 முதலே மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, 300 ஷரங் ரக பீரங்கிகளை வாங்க முடிவு செய்து, 'அவெயில்' எனப்படும், 'மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் இந்தியா லிமிடெட்' என்ற கம்பெனிக்கு ஒப்பந்தம் வழங்கியது. சோவியத் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்ட எம் - 46 ரக பீரங்கிகளை மேம்படுத்துவது தான் நம் ராணுவத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
ஆரம்பத்தில், நம் ஆயுத தொழிற்சாலையில் வைத்தே எம் - 46 ரக பீரங்கிகளின் சுடும் துாரத்தை மேம்படுத்தி, புதிய ரகத்தில் உற்பத்தி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
ஆனால், திடீரென அந்த பணி, 'அவெயில்' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதற்காக 200 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமும் போடப்பட்டது. இதையடுத்து, பீரங்கிகள் சுடும் துாரத்தை 27 கி.மீ.,யில் இருந்து 39 கி.மீ., ஆக உயர்த்த நம் ராணுவம் இலக்கு நிர்ணயித்தது.
அதன்படி, சோவியத் கால பீரங்கிகள் மேம்படுத்தப்பட்டு 159 ஷரங் ரக பீரங்கிகள் ராணுவம் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், மேற்கொண்டு 141 பீரங்கிகள் தயாரிப்பதற்கான பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு, நம் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட பீரங்கிகள் தரம் இல்லாமல் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதால், கொள்முதலை தற்காலிகமாக நிறுத்த ராணுவம் முடிவு செய்தது. குறிப்பாக பீரங்கிகளின் மின்னணு மற்றும் உலோகவியல் செயல்பாடுகளில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ராணுவத்தின் பொதுத்துறை நிறுவனம் மீது இப்படி குற்றச்சாட்டு எழுவது முதல் முறையல்ல. ஏற்கனவே, டில்லியைச் சேர்ந்த சித் விற்பனை சிண்டிகேட், போபர்ஸ் பீரங்கியின் மேம்படுத்தப்பட்ட வடிவமான தனுஷ் பீரங்கிகளுக்கு போலியான பேரிங்குகளை சப்ளை செய்திருந்ததை சி.பி.ஐ., கண்டுபிடித்தது.