''ஆம்ஆத்மி ஊழல் கட்சியாக மாறிவிட்டது'': டில்லி அமைச்சர் ராஜினாமா
''ஆம்ஆத்மி ஊழல் கட்சியாக மாறிவிட்டது'': டில்லி அமைச்சர் ராஜினாமா
UPDATED : ஏப் 10, 2024 05:54 PM
ADDED : ஏப் 10, 2024 05:18 PM

புதுடில்லி: டில்லியில் ஆளும் ஆம்ஆத்மி கட்சியின் அமைச்சராக உள்ள ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததுடன், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். ஆம்ஆத்மி கட்சி ஊழல் கட்சியாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. இதில் புதிய மதுபான கொள்கை நடைமுறைப்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக அக்கட்சியின் அமைச்சர்கள் மணிஷ் சிசோடியா, சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோரை ஏற்கனவே அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், சமீபத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் கைது செய்தது.
இது நாடு முழுவதும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. லோக்சபா தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஊழல் கட்சி
இந்த நிலையில் டில்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ஆம்ஆத்மி கட்சியில் இருந்து இன்று (ஏப்.,10) விலகினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சி ஊழலை எதிர்த்துப் போராட துவங்கப்பட்டது. ஆனால் இன்று அந்த கட்சி ஊழலில் சிக்கித் தவிக்கிறது.
அமைச்சர் பதவியில் பணியாற்றுவது எனக்கு கடினமாகிவிட்டது. ஊழல் என்ற பெயருடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை. எனவே, அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளேன்.
'அரசியல் மாறினால் நாடு மாறும்' என பேசியவர் முதல்வர் கெஜ்ரிவால். இன்று அரசியல் மாறவில்லை, அரசியல்வாதி மாறிவிட்டார். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக நான் அமைச்சரானேன். தலித்துகளின் பிரதிநிதித்துவத்தை தடுத்து நிறுத்தும் கட்சியில் தான் நீடிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

