வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற விவகாரம்: லாலு மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
வேலைக்கு நிலம் லஞ்சம் பெற்ற விவகாரம்: லாலு மனைவி, மகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
ADDED : ஜன 09, 2024 04:25 PM

புதுடில்லி: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்கு நிலங்களை லஞ்சமாக பெற்றது தொடர்பான வழக்கில், பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2004 - 09 ல் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது ரயில்வேயில் ‛ டி ' பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம் வேலை தருவதாக கூறி, அதற்கு லஞ்சமாக நிலங்களை குறைந்த விலைக்கு பெற்றதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ.,யும், அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்த வழக்கில், டில்லியில் உள்ள பணமோசடி தடுப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், லாலு பிரசாத் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி, மகள் மிசா பாரதி, லாலு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான அமித் கத்யால் உள்ளிட்டவர்கள் மற்றும் சில நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கு விசாரணையை வரும் 16 ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த வழக்கில், அமித் கத்யால் கடந்த நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத், மகன் தேஜஸ்விக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர்கள் இன்னும் ஆஜராகவில்லை.
லாலு குடும்பத்தினர் மீது சி.பி.ஐ.,யும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.