உத்தரகண்டில் இனவெறி தாக்குதல் திரிபுரா மாணவர் குத்தி கொலை
உத்தரகண்டில் இனவெறி தாக்குதல் திரிபுரா மாணவர் குத்தி கொலை
ADDED : டிச 29, 2025 12:46 AM

டேராடூன்:உத்தரகண்டில் மர்ம கும்பலால் திரிபுராவை சேர்ந்த பழங்குடியின மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'நான் இந்தியன்' என அவர் கூறியதை நம்பாமல் அந்த கும்பல் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவின், உனகோடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளைஞர் அஞ்சல் சக்மா, 24. இவரது சகோதரர் மைக்கேல் சக்மா. பழங்குடியினத்தைச் சேர்ந்த இவர்கள் உத்தரகண்டில் படித்து வந்தனர்.
டேராடூனில் உள்ள பல்கலையில் அஞ்சல் சக்மா எம்.பி.ஏ., படித்து வந்தார். டேராடூனில் உள்ள உத்தராஞ்சல் பல்கலையில் மைக்கேல் படிக்கிறார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி சகோதரர்கள் இருவரும் செலகோய் சந்தைக்கு சென்றனர். அப்போது போதையில் வந்த ஒரு கும்பல், அஞ்சல், மைக்கேலை வழிமறித்து சீனர்கள் என நினைத்து சரமாரியாக திட்டியது.
ஆனால் அஞ்சல் தான் இந்தியன் என கூறியும் அக்கும்பல் நம்பவில்லை.
'இந்தியன் என்பதற்கான ஆவணங்களை காட்டவா?' என, அஞ்சல் கேட்டும் அவர்கள் பொருட்படுத்தாமல் அவரை கத்தியால் குத்தினர். சகோதரர் மைக்கேலையும் திட்டியபடி கத்தியால் குத்தினர். இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த அஞ்சல், அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 14 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் அஞ்சல் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்; மைக்கேல் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார்.
இதையடுத்து, திரிபுராவின் அகர்தலாவுக்கு அஞ்சலின் உடல் விமானத்தில் கொண்டு செல்லப்பட்டு, சொந்த ஊரில் இறுதி சடங்கு செய்யப்பட்டது. அஞ்சலின் மரணம் திரிபுராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, திப்ரா மோத்ரா கட்சி தலைவர் பிரத்யோத் பிக்ராம் கூறுகையில், ''வடகிழக்கு மாநில மக்கள் இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவது துயரமான விஷயம். இந்த தாக்குதல் நம்மை பிளவுப்படுத்துகிறது. எங்களுக்கு நீதி வேண்டும்'' என கூறினார்.
இதையடுத்து மைக்கேல் அளித்த புகாரின்படி, இரு சிறார் உட்பட ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப் பட்டனர்.
முக்கிய குற்றவாளி யக்யா அவஸ்தி, நம் அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை பிடித்து தருபவர்களுக்கு 25,000 ரூபாய் பரிசு தரப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

