ADDED : பிப் 22, 2024 01:50 AM

மும்பை, மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்தவர் அமீன் சயானி. பன்மொழி குடும்பத்தில் பிறந்த இவர், சிறு வயது முதலே கலைத் துறையில் ஆர்வமிக்கவராக இருந்தார்.
அவரது தாய் நடத்தி வந்த பத்திரிகையில், 13 வயதிலேயே கட்டுரை எழுதத் துவங்கினார். பின், அப்போதைய பம்பாய் வானொலி நிலையத்தில், சிறுவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது மட்டுமின்றி தொகுத்தும் வழங்கினார்.
அனைத்திந்திய வானொலியில் பல ஆண்டுகள் பணியாற்றினார். கடந்த 1952ல் நம் நாட்டின் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்த பி.வி.கேஸ்கர், ஹிந்தி திரைப்படப் பாடல்களில் ஆபாசம் நிறைந்திருப்பதால் அதை அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்ப தடை விதித்தார்.
அந்த நேரத்தில் தான், நம் அண்டை நாடான இலங்கையில் இருந்து ஒலிபரப்பான ரேடியோ சிலோன் பிரபலம் அடையத் துவங்கியது. இதையடுத்து, அமீன் சயானி அங்கு பணியில் சேர்ந்தார்.
இங்கு பிரபல ஹிந்தி திரைப்படப் பாடல்களை தொகுத்து வழங்கும் 'பினாகா கீத்மாலா' நிகழ்ச்சியை சிறந்த முறையில் தொகுத்து வழங்கினார். இதனால், இலங்கை மட்டுமின்றி நம் நாட்டிலும் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்த நிகழ்ச்சி, 1952 முதல் 1994 வரை இவரால் தொகுத்து வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, மும்பை தனியார் மருத்துவமனையில் அமீன் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பால் நேற்று அவர் காலமானார்.
பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.