அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; ராகுல் குற்றச்சாட்டு
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்; ராகுல் குற்றச்சாட்டு
ADDED : பிப் 28, 2026 03:28 PM

பர்னாலா: ஆண்டுதோறும் ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்புக்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார் என்று லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.
பஞ்சாபின் பர்னாலா பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் பேசியதாவது: டில்லியில் தற்போது என்ன நடக்கிறது, கடந்த சில நாட்களாக பிரதமர் என்ன செய்தார், அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.
இந்தியா, அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் நமது விவசாயிகளை அழிக்கும். ஆண்டு தோறும் ரூ.9 லட்சம் கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களை இந்தியா வாங்கும் என்று டிரம்புக்கு பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்துள்ளார்.
முதலில் நாட்டின் அடித்தளமானது விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கைகளில் இருக்கிறது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்களுக்கு காங்கிரஸ் என்றுமே துணை நிற்கும்.
நான் எதிர்க்கட்சித் தலைவர். பார்லி.யில், ஜனாதிபதி உரையைத் தொடர்ந்து நான் எனது உரையை ஆரம்பித்தேன். எனது உரையின் தொடக்கம் முதலே நரவனே புத்தகம் குறித்து ஒரு கேள்வியை எழுப்பினேன். இந்திய எல்லையில் சீனா ராணுவ டாங்கிகள் நுழைந்ததாக அவர் (நரவனே) எழுதி உள்ளார்.
தனி நபர் எப்போதும் ஒரு விளையாட்டில் வெற்றியை பெற முடியாது. என்னிடம் ஒரு அணி இருக்கிறது. அணியின் வீரராக இருங்கள், நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கட்சியை விட பெரியவர்கள் இல்லை.
இவ்வாறு ராகுல் பேசினார்.

