ADDED : நவ 03, 2024 05:19 PM

வயநாடு: என்னுடைய சகோதரி பிரியங்காவை, சகோதரியாகவும், தாயாகவும் மற்றும் மகளாகவும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என வயநாடு தேர்தல் பிரசாரத்தில் லோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் கூறினார்.
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு, நவ.13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் சார்பில் பிரியங்காவும், பா.ஜ. வேட்பாளராக நவ்யா ஹரிதாஸ் மற்றும் இடதுசாரி வேட்பாளராக சத்யன் மோகெரியும் போட்டியிடுகிறார்கள்.
இந்நிலையில் வயநாடு மானந்தவாடியில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பிரயங்காவுக்கு ஆதரவாக, ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் பொதுசெயலர் வேணுகோபால், கட்சியின் மாநில கமிட்டி தலைவர் சுதாகரன், எம்.பி., சுரேஷ், சித்திக் எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ராகுல் பேசியதாவது:
பிரியங்காவை சகோதரியாக பெற்றது எனக்கு அதிர்ஷ்டம். அதுபோல, சகோதரி கிடைத்ததற்கு நீங்களும் அதிர்ஷ்டசாலிகள் தான். பிரியங்காவை எம்.பி.,யாக நீங்கள் தேர்வு செய்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு ராகுல் பேசினார்.
பிரியங்கா பேசுகையில்,
எனது சகோதரர் ராகுல், உண்மையான உரிமைகளுக்காக போராடுபவர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால் அவருக்கு நீங்கள் ஆதரவு அளித்து போராட ஊக்கம் அளித்தீர்கள். அவருக்கு அளித்த ஆதரவு போல் எனக்கும் அளிக்க வேண்டும் என்றார்.