இன்னும் 25 கேஸ் போடுங்களேன் அசாம் போலீசுக்கு ராகுல் சவால்
இன்னும் 25 கேஸ் போடுங்களேன் அசாம் போலீசுக்கு ராகுல் சவால்
ADDED : ஜன 25, 2024 01:30 AM
பார்பேட்டா, மணிப்பூர் முதல் மஹாராஷ்டிரா வரையிலான ராகுலின் யாத்திரை குழு, அசாமில் இருந்து மேகாலயாவுக்குள் சென்று, மீண்டும் அசாம் வந்தது. தலைநகர் குவஹாத்தியில் நுழைய அசாம் அரசு அனுமதி மறுத்தது.
ராகுலுடன் வந்த காங்கிரஸ் தொண்டர்கள், போலீசார் அமைத்த தடுப்புகளை அடித்து நொறுக்கி ஊருக்குள் நுழைய முயன்றனர். அவர்களுக்கும், போலீசுக்கும் மோதல் உருவானது.
சிலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை திருப்பி விட்டனர்.
கும்பலை துாண்டிவிட்டு அரசு சொத்துக்களை சேதப்படுத்தியதாக ராகுல் மீது வழக்கு போட அசாம் முதல்வர் உத்தரவிட்டார்.
கட்டுப்பாடு
அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். லோக்சபா தேர்லுக்குப்பின் ராகுல் கைது செய்யபடுவார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில், ராகுலின் யாத்திரை நேற்று பார்பேட்டா நகரில் இருந்து தொடர்ந்தது.
வேன் மீது நின்றவாறு ராகுல் பேசியதாவது:
உங்களிடம் வெற்றிலை இருக்கலாம். அதில் நீங்கள் சேர்க்கும் பாக்கு விற்பனை தொழில், முதல்வர் கையில் உள்ளது.
ஒவ்வொரு முறை நீங்கள் வெற்றிலை போடும்போதும், அதில் சேர்க்கும் பாக்கு முதல்வருக்கு சொந்தமான நிறுவனத்திலிருந்து வந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் முதல்வர் ஒவ்வொரு நாளும் பயத்தையும் வெறுப்பையும் பரப்புகிறார்.
அசாமில் வெறுப்பும் பயமும் பரப்பப்படும் போதெல்லாம் உங்கள் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
அவர் வெறுப்பை பரப்பி நீங்கள் அதை கவனித்துக்கொண்டிருக்கும் போது உங்கள் பைகளில் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொள்கிறார்.
எனவே தான் அவர் நாட்டின் ஊழல் மிகுந்த முதல்வர் என்கிறேன்.
காசிரங்காவில் இருந்தும் அவர் நிலம் எடுத்துள்ளார். முதல்வரின் அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கைகளில் உள்ளன. அவர் அமித் ஷாவுக்கு எதிராக ஏதாவது பேசினால், அடுத்த நிமிடம் கட்சியில் இருந்து துாக்கி எறியப்படுவார்.
என்னை பயமுறுத்தும் எண்ணம் முதல்வர் பிஸ்வாவுக்கு எப்படி வந்தது என தெரியவில்லை.
எனக்கு பயமில்லை
இதுவரை 25 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மேலும் 25 வழக்குகள் கூட போடுங்கள். உங்களால் முடிந்தவரை வழக்கு போடுங்கள். எனக்கு பயமில்லை.
பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ். என்னை ஒரு போதும் மிரட்ட முடியாது. அவர்கள் வெறுப்பையும், பயத்தையும் பரப்புகின்றனர். நாங்கள் அன்பை பரப்புகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.