சோனியா, பிரியங்கா உடன் சென்று ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்
சோனியா, பிரியங்கா உடன் சென்று ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்
UPDATED : மே 03, 2024 07:00 PM
ADDED : மே 03, 2024 10:46 AM

புதுடில்லி: ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் இன்று (மே 3) வேட்புமனு தாக்கல் செய்தார். தாக்கலின்போது சோனியா, பிரியங்கா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுலும், அமேதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் அறிவித்து உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்றே கடைசி நாள் என்பதால், இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்காக, சோனியா, ராகுல், பிரியங்கா, ராபர்ட்வாத்ரா ஆகியோர் அமேதி வந்தடைந்தனர். இங்கிருந்து ரேபரேலி சென்று ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக விமான நிலையத்தில் சோனியா, ராகுல், பிரியங்காவை ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்றனர்.
அமேதி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல்
அமேதி தொகுதி காங்., வேட்பாளர் கிஷோரி லால் சர்மா, இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து பேசிய சர்மா, ''யார் வெற்றிப்பெறுவார்கள், யார் தோல்வியடைவார்கள் என்பது மக்கள் கையில் உள்ளது. கடினமாக உழைப்போம். தங்களுக்காக பாடுபடுபவர்களை மக்கள் தேர்ந்தெடுக்க தேர்தல் ஒரு சம்பிரதாயமாக நடத்தப்படுகிறது. அமேதி மக்கள் என் இதயத்தில் உள்ளனர். நான் 40 வருடங்களாக இங்கு இருக்கிறேன். கட்சி தலைமை எனக்கு அறிவுறுத்தியதை நான் பின்பற்றுகிறேன். மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்'' என்றார்.