ADDED : பிப் 17, 2024 12:03 PM

புதுடில்லி: ‛‛ உடல்நலக்குறைவால் ராகுலின் பாத யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை '' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியுள்ளார். ஆனால், அவருக்கும், அவரது சகோதரர் ராகுலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை தான் காரணம் என பா.ஜ., கூறியுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுல் மணிப்பூரில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பை வரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இந்த யாத்திரை நேற்று உ.பி., மாநிலத்திற்குள் நுழைந்தது. இதனை, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வரவேற்பதாக இருந்தது. ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.
இது தொடர்பாக பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில், உ.பி.,யில் பாத யாத்திரையில் பங்கேற்க ஆவலாக இருந்தேன். ஆனால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் முடியவில்லை. உடல்நலன் தேறியதும் உடனடியாக யாத்திரையில் கலந்து கொள்வேன். இந்த யாத்திரைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், பா.ஜ.,வின் அமித் மாளவியா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அனைவரும் தங்களது உடல்நலனை கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த யாத்திரை துவங்கிய போதும் மணிப்பூரில் பிரியங்காவைக் காணவில்லை. யாத்திரை உ.பி., வந்தடைந்த போதும் அவரை பார்க்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் உரிமைக்காக, ராகுல் பிரியங்கா இடையே சரி செய்ய முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளது தற்போது நன்றாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.