நாகா பிரச்னைக்கு தீர்வு காணவில்லை; பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு
நாகா பிரச்னைக்கு தீர்வு காணவில்லை; பிரதமர் மீது ராகுல் குற்றச்சாட்டு
UPDATED : ஜன 18, 2024 04:56 AM
ADDED : ஜன 18, 2024 02:20 AM

கோஹிமா, ''நாகா அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண, கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி எதுவுமே செய்யவில்லை,'' என, காங்., - எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை'யை கடந்த 14ம் தேதி, காங்., - எம்.பி., ராகுல் துவங்கினார். இந்த யாத்திரை, நாகாலாந்தின் மொகோக்சுங் என்ற நகருக்கு நேற்றுவந்தடைந்தது.
அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில், ராகுல் பேசியதாவது:
நாகா அமைதி ஒப்பந்தம் விவகாரத்தில், அம்மாநில மக்களின் நம்பிக்கை மற்றும் கருத்துக்கள் இல்லாமல் தீர்வு காண முடியாது. இந்த விவகாரத்தில், தீர்வு இல்லை என்றால் இல்லை என, பிரதமர் மோடி வெளிப்படையாக கூற வேண்டும். அதை விடுத்து, நாகாமக்களை பொய் சொல்லி ஏமாற்றக் கூடாது.
கடந்த 2015ல், இது தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மோடி இருந்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதில், காங்., உறுதியாக உள்ளது.
நாகாலாந்தின் பல்வேறு இடங்களில், சாலைவசதிகள் முறையாக இல்லை என்பதை வரும் வழிகளில் கண்டேன். இந்த வசதிகளை வைத்து, மற்ற மாநில இளைஞர்களிடம், நாகா இளைஞர்கள் எவ்வாறு போட்டியிட முடியும்?
நம் நாட்டில் ஒரு கருத்தியல் போர் நடக்கிறது. நாட்டில் உள்ள மதங்கள் மற்றும் அவற்றின் கலாசாரம், பாரம்பரியத்தை பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., சிதைத்து வருகின்றன. மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து பல மாதங்களாகியும், பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை. ஓர் இந்தியனாக இதை நினைத்து வெட்கப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.