தேர்தல் வந்தாச்சு...! கோரிக்கையும் எழுந்தாச்சு: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்கிறார் ராகுல்
தேர்தல் வந்தாச்சு...! கோரிக்கையும் எழுந்தாச்சு: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்கிறார் ராகுல்
ADDED : ஆக 22, 2024 02:12 PM

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் வலியுறுத்தினார்.
ஜம்மு காஷ்மீருக்கு வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுக்க, ஸ்ரீநகரில் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடந்தது. ராகுல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
வெறுப்பு
கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இதற்கு தான் இண்டியா கூட்டணி முன்னுரிமை அளிக்கும். அன்பின் மூலமாக இந்த உலகில் வெறுப்பை ஒழிப்போம். காஷ்மீர் மக்களின் அச்சத்தை போக்குவதே எங்களின் நோக்கம். லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியின் கனவை இண்டியா கூட்டணி அழித்துவிட்டது. காங்கிரஸ் கட்சியின் கொள்கை, இண்டியா கூட்டணி, அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றால் பா.ஜ., வின் நோக்கம் தோற்கடிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மக்கள், எங்களுக்கும் இந்த நாட்டுக்கும் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தலை தீர்மானிக்கும் பா.ஜ.,
கார்கே பேசியதாவது: ''ஜம்மு காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் நம் கட்டுப்பாடிற்குள் வந்துவிடும். வரவிருக்கும் தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் எங்களுடன் நிற்பார்கள் என்று நம்புகிறோம். தேர்தலை எங்கு, எப்போது துவங்க வேண்டும் என்பதை பா.ஜ.,தான் தீர்மானிக்கிறது. அவர்கள் எங்களை குறிவைக்கின்றனர். பா.ஜ.,வுக்கு எதிராக போராடும் ஒரே நபர் ராகுல். நாட்டை காப்பாற்றவும், உரிமைகளையும் உங்களுடைய ஓட்டுகள் எங்களுக்கு தேவை'' என்றார்.