UPDATED : நவ 21, 2024 01:47 PM
ADDED : நவ 21, 2024 12:55 PM

புதுடில்லி: 'அதானியை கைது செய்ய வேண்டும். அவரது முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த உடனடியாக பார்லிமென்ட் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்' லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தினார்.
டில்லியில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முறைகேடுகள் செய்யும் அதானியை பிரதமர் மோடி பாதுகாக்கிறார். அதானி செய்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உடனடியாக பார்லிமென்ட் கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும். முறைகேடு புகாரில் தொடர்புடைய செபி தலைவர் மாதவியையும் பிரதமர் மோடி பாதுகாக்கிறார். அதானியை விரைந்து கைது செய்ய வேண்டும்.
ஆச்சரியம்
இந்தியாவில் அதானி எப்படி சுதந்திரமாக சுற்றி வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. பிரதமர் மோடியை அதானி கட்டுப்படுத்துகிறார். அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் போது, அதானி மீது இந்தியா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் லஞ்சம் பெற்று இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடியின் ஊழலுக்கு பின்னணியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக அம்பலப்படுவார்கள்.
அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் மீண்டும் மீண்டும் பேசி வருகிறோம். ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் தொழிலதிபர் அதானி மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். அதானி ஊழல் குற்றச்சாட்டுகளில் பிரதமர் மோடியும் உடந்தையாக உள்ளார். அதனால் தான் சாதாரண மனிதரை போல் அதானியால் நாட்டில் நடமாட முடிகிறது.
அதானி பவரா, மோடி பவரா?
ஒரு எதிர்க்கட்சி தலைவராக அதானி பிரச்னையை எழுப்புவது எனது கடமை. ஜார்க்கண்ட் முதல்வர் உட்பட பல மாநில முதல்வர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதானி என்ன செய்தாலும், பிரதமரும், அவரது நெட்வோர்க்கும் பாதுகாக்கின்றனர். பிரதமர் மோடிக்கு அதானியை கைது செய்யும் திறன் இல்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா சட்டங்களை அதானி மீறியிருப்பது, அமெரிக்கா நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் மூலம் தெளிவாகியுள்ளது. இவ்வாறு ராகுல் கூறினார்.
ராகுல் கிண்டல்
அதானி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ராகுல் பேட்டி அளித்துக் கொண்டிருக்கும் போது, மின்தடை ஏற்பட்டது. அப்போது, இது அதானி பவரா? அல்லது மோடி பவரா? என்று நிருபர்களிடம் ராகுல் கிண்டலாக பேசினார்.