என் வீட்டை தாக்க ராகுல் சதி: காங்., முன்னாள் எம்.பி., திடுக் குற்றச்சாட்டு
என் வீட்டை தாக்க ராகுல் சதி: காங்., முன்னாள் எம்.பி., திடுக் குற்றச்சாட்டு
UPDATED : ஜன 27, 2026 10:02 PM
ADDED : ஜன 27, 2026 09:58 PM

புதுடில்லி: காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை கடுமையாக விமர்சித்த, அக்கட்சியின் முன்னாள் எம்.பி., ஷகீல் அகமது, ''பீஹாரில் உள்ள என் வீட்டின் மீது தாக்குதல் நடத்த கட்சி தொண்டர்களுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார்,'' என, குற்றஞ்சாட்டி உள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்., படுதோல்வி அடைந்தது. இதனால் அதிருப்தி அடைந்த காங்., முன்னாள் எம்.பி., ஷகீல் அகமது, கட்சியில் இருந்து விலகினார். மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்த இவர், இரு முறை எம்.பி.,யாகவும் இருந்துள்ளார்.
சமீபத்தில், காங்கிரசின் தேர்தல் தோல்விகள் குறித்து ஷகீல் அகமது கூறுகையில், ''ராகுல் ஒரு கோழை. அவருக்கு அரசியல் அறிவே கிடையாது. சர்வாதிகாரி போல செயல்படுகிறார்.' ' மூத்த தலைவர்கள் அறிவுரை கூறினாலும் ஏற்க மறுக்கிறார். தனக்கு துதிபாடும் இளம் தலைவர்களை மட்டுமே அவர் ஊக்குவிக்கிறார். மக்கள் செல்வாக்குள்ள மூத்த தலைவர்களை அவர் அவமதிக்கிறார்,'' என, விமர்சித்தார். இது, பீஹார் காங்., நிர்வாகிகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஷகீல் அகமது அளித்த பேட்டி: ராகுலின் தலைமையை விமர்சித்ததால், என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவரை விமர்சித்த ஒரே காரணத்திற்காக காங்கிரசினர் என்னை குறிவைத்து மிரட்டல் விடுக்கின்றனர். என் வீட்டில் தாக்குதல் நடத்த காங்., தொண்டர்களுக்கு ராகுல் உத்தரவிட்டுள்ளார். இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.
பாட்னா, மதுபானியில் உள்ள என் வீட்டில் தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இது குறித்து காங்கிரசில் உள்ள என் நண்பர்கள், ரகசியமாக என்னிடம் தெரிவித்தனர். பீஹார் காங்., பொறுப்பாளர் கிருஷ்ணா அல்லாவரு தான், இந்த மிரட்டல்களுக்கு பின்னால் இருக்கிறார்.இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.

