ரயில்வே குறைபாடுகளை சொல்லுங்க: இணையதளம் தொடங்கினார் ராகுல்!
ரயில்வே குறைபாடுகளை சொல்லுங்க: இணையதளம் தொடங்கினார் ராகுல்!
ADDED : அக் 30, 2024 07:30 AM

புதுடில்லி: ரயில்வே அமைப்பில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டால், https://rahulgandhi.in/awaazbharatki என்ற இணைய தளத்தில் தகவல் தெரியுங்கள் என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
இது குறித்து ராகுல் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகைக்கு கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினரை சந்திக்க ரயிலில் பயணம் செய்வார்கள். ரயில்வே கட்டமைப்பு மோசமாக உள்ளது. பயணிகளின் தேவையை ரயில்வே துறை பூர்த்தி செய்யவில்லை. ரயில்வே என்பது, தினசரிப் பயணியாகவோ, சுற்றுலாப் பயணியாகவோ, நகர்ப்புறமாகவோ அல்லது கிராமப்புறங்களில் வசிப்பவராகவோ, ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது.
சிறந்த ரயில் வசதி
ரயில்கள் நின்றுவிட்டால் இந்திய நாடே ஸ்தம்பித்துவிடும். அனைவருக்கும் அணுகக்கூடிய சிறந்த ரயில் வசதி இந்தியாவுக்குத் தேவை. ஆனால் இன்று பாலசோரிலிருந்து பாந்த்ரா வரை பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் நமது ரயில் பாதை பழுதடைந்துள்ளது. இந்த நேரத்தில், மக்களின் குறைகளை கேட்க யாரும் இல்லை. சிறந்த இந்தியாவை உருவாக்க மக்கள் அனைவரையும் குரல் எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புகார் தாருங்கள்
ரயில்வே அமைப்பில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டாலோ அல்லது மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் இருந்தாலோ, உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். https://rahulgandhi.in/awaazbharatki என்ற இணை யதளத்தில் தகவல் தெரியுங்கள்.நமது கனவுகளான இந்தியாவை ஒன்றாகக் கட்டமைப்போம். ஜெய் ஹிந்த்.இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.