தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல் பச்சைக்கொடி
தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க ராகுல் பச்சைக்கொடி
ADDED : டிச 01, 2024 05:06 AM

புதுடில்லி: ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில், காங்., தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பச்சைக்கொடி காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹரியானாவில் அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளும் பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. காங்., வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், பா.ஜ., வெற்றி பெற்றது, காங்., நிர்வாகிகளை அதிர்ச்சி அடையச் செய்தது.
மஹாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான 'மஹாயுதி' கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்., வெறும் 16 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அக்கட்சியின் கூட்டணி கட்சிகளும் சொற்ப இடங்களையே கைப்பற்றின.
ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல் தோல்விக்கு பின், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கார்கே பேசுகையில், 'நாம் ஒற்றுமையுடன் செயல்படாமல், நமக்குள்ளே சண்டையிட்டு கொண்டால், நம் அரசியல் எதிரிகளை எப்படி வீழ்த்த முடியும்?
'ஹரியானா, மஹாராஷ்டிரா தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்கவும், கட்சியின் குறைபாடுகளை அடையாளம் காணவும், இரு மாநிலங்களில், சில கடினமான முடிவுகள் தவிர்க்க முடியாதவை' என்றார்.
இந்நிலையில், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், காங்., தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்யவும், கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பச்சைக்கொடி காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹரியானா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு, விரைவில், காங்., ஆய்வுக் குழுவினர் செல்லவுள்ளனர். அங்கு உள்ளூர் நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல் தோல்விக்கான காரணங்களை கேட்கவுள்ளனர்.
அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி, கட்சி தலைவர் கார்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க உள்ளார். இதனால், வரும் நாட்களில் ஹரியானா, மஹாராஷ்டிரா காங்கிரசில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என, கூறப்படுகிறது.