விறுவிறுப்பில் ஹரியானா தேர்தல்! கூட்டணிக்காக வெயிட் பண்ணும் ராகுல்
விறுவிறுப்பில் ஹரியானா தேர்தல்! கூட்டணிக்காக வெயிட் பண்ணும் ராகுல்
UPDATED : செப் 03, 2024 07:48 AM
ADDED : செப் 03, 2024 06:56 AM

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 1ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன் பின்னர் தேதியை மாற்றி மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் அக்டோபர் 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, அக்டோபர் 8ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படும் என்று அறிவித்தது.
தேர்தல் தேதி மாற்றப்பட்டு விட்ட நிலையில், களத்தில் பா.ஜ., காங்., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன. இந் நிலையில், ஹரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்புவதாகவும், அதற்காக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
கூட்டணி விருப்பம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ராகுல் கருத்துக் கேட்டுள்ளதாகவும், அவர்கள் கூறும் கருத்துகள் அடிப்படையில் முடிவு எடுக்க தீர்மானித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக தேர்தல் கூட்டணி குறித்து இரு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தனர். குறிப்பாக ஆம் ஆத்மி தனித்தே போட்டியிடும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் குமாரி செல்ஜாவும், தனித்தே களம் காணும் அளவுக்கு கட்சி பலமுடன் காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.