ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்! காங்கிரஸ் போடுகிறது 'துண்டு'
ராகுலுக்கு நோபல் பரிசு வேணும்! காங்கிரஸ் போடுகிறது 'துண்டு'
ADDED : அக் 12, 2025 05:30 AM

புதுடில்லி: அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயக போராளியுமான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'காங்., - எம்.பி., ராகுலும் ஜனநாயகத்துக்காக போராடி வருகிறார். அவரும் நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர் தான்' என, காங்கிரஸ் கட்சியினர் வக்காலத்து வாங்கி உள்ளனர்.
உலக நாடுகளில் அதிக போர்களை நிறுத்திய சாதனைக்காக, தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் அடம்பிடித்து வந்தார். அவருக்கு பாகிஸ்தானும் ஆதரவாக துதி பாடியது.
டிரம்பின் இந்த ஆசையில் மண் விழுந்தது. இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென் அமெரிக்க நாடான வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், சமூக ஆர்வலருமான மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டிரம்ப் வரிசையில், தங்களது தலைவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டும் என காங்., செய்தி தொடர்பாளர் சுரேந்திர ராஜ்புத் குரல் கொடுத்து இருக்கிறார்.
சமூக வலைதளத்தில், ஒருபுறம் மரியாவின் புகைப்படத்தையும், மறுபுறம் ராகுலின் புகைப்படத்தையும் பதிவிட்டு, அவர் இந்த கருத்தை முன்வைத்திருக்கிறார்.
இது குறித்து சுரேந்திர ராஜ்புத் கூறியதாவது:
அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுலும் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அமைதிக்கான நோபல் பரிசு பெறும் தகுதி அவருக்கும் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.