புல்டோசர் கொள்கை அம்பலம்: எதை சொல்கிறார் ராகுல்!
புல்டோசர் கொள்கை அம்பலம்: எதை சொல்கிறார் ராகுல்!
UPDATED : செப் 03, 2024 09:29 AM
ADDED : செப் 03, 2024 07:21 AM

புதுடில்லி: 'பா.ஜ.,வின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான முகம் தற்போது அம்பலமாகியுள்ளது' என காங்கிரஸ் எம்.பி.,யும். எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார்.
'குற்ற வழக்குகளில் ஒருவர் சிக்கினாலே அவருடைய வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது சரியா? சட்ட விதிகளுக்கு உட்பட்டே இந்த நடவடிக்கை இருக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த கருத்துக்கு ராகுல் வரவேற்பு தெரிவித்தார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
அம்பலம்
பா.ஜ.,வின் அரசியலைப்பு சட்டத்திற்கு விரோதமான, நியாயமற்ற 'புல்டோசர் கொள்கை' குறித்து உச்ச நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது. மனிதநேயத்தையும் நீதியையும் புல்டோசரின் கீழ் நசுக்கும் பா.ஜ.,வின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான முகம் தற்போது நாட்டின் முன் அம்பலமாகியுள்ளது. கட்டுக்கடங்காத அதிகாரத்தின் அடையாளமாக விளங்கிய புல்டோசர், சிவில் உரிமைகளை காலில் போட்டு மிதித்து சட்டத்தை ஆணவத்துடன் தொடர்ந்து சவால் செய்து வருகிறது.
வழிகாட்டுதல்
'விரைவான நீதி' என்ற போர்வையில், ஏழைகளின் வீடுகள் புல்டோசர்களை பயன்படுத்தி இடிக்கப்படுகிறது. மிகவும் உணர்ச்சிகரமான இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும். பா.ஜ., அரசின் இந்த ஜனநாயக விரோதப் பிரசாரத்திலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். அரசியலமைப்புச் சட்டத்தால் நாடு இயங்கும், அதிகாரத்தின் சாட்டையால் அல்ல. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.