ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் கேட்டறிந்தார் ராகுல்
ஜம்மு காஷ்மீர் நிலவரம் குறித்து அமித் ஷாவிடம் கேட்டறிந்தார் ராகுல்
UPDATED : ஏப் 23, 2025 11:30 AM
ADDED : ஏப் 23, 2025 08:49 AM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் நேற்று நேரில் ஆய்வு செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவரிடம் நிலைமை குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேட்டறிந்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பாதியில் முடித்து கொண்டு நாடு திரும்பினர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஹல்காமுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, சம்பவம் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனிடையே, பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து காஷ்மீரில் அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. மேலும், பஹல்காமில் இருக்கும் உள்ளூர் டாக்ஸி டிரைவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். பாரமுல்லா, ஸ்ரீநகர், பூஞ்ச், குப்வாரா பகுதிகளிலும் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. அதேபோல, பஜ்ரங் தள் ஆதரவாளர்கள், இந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்முவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேட்டறிந்தார். மேலும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஜம்மு காஷ்மீருக்கான காங்கிரஸ் தலைவர் தரிக் காரா ஆகியோரிடமும் நிலைமை குறித்து கேட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பதாக ராகுல் தெரிவித்தார்.