நேர்மையற்ற மனிதர் ராகுல்: ஆம் ஆத்மி போஸ்டரால் காங்., கோபம்
நேர்மையற்ற மனிதர் ராகுல்: ஆம் ஆத்மி போஸ்டரால் காங்., கோபம்
ADDED : ஜன 25, 2025 10:16 PM

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, நகரின் பல இடங்களில் போஸ்டர்களை ஒட்டி உள்ள ஆம் ஆத்மி, அதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுலை நேர்மையற்ற மனிதர் எனக்குறிப்பிட்டு உள்ளது. இதனால், கோபம் அடைந்தால்,தைரியம் இருந்தால் ஆம் ஆத்மி இண்டியா கூட்டணியை விட்டு வெளியேறலாம் எனக்கூறியுள்ளது.
டில்லி சட்டசபை தேர்தலில் ' இண்டியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி காங்கிரஸ் ஆகியன தனித்தனியே போட்டியிடுகின்றன. பா.ஜ.,வும் தனித்து களமிறங்கி உள்ளது. மூன்று கட்சிகளும் ஒருவர் மீது மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றன. இதனால், தேர்தல் களம் விறுவிறுப்பாக உள்ளது.
இந்நிலையில், டில்லியின் பல இடங்களில் ஆம் ஆத்மி போஸ்டர் ஒன்றை ஒட்டி உள்ளது. அதில் நேர்மையற்ற மனிதர்களாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், அனுராக் தாக்கூர் படங்களுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல், அஜய் மக்கான் மற்றும் சந்தீப் தீக்ஷித் ஆகியோரை சித்தரித்துள்ளது. மேலும், இவர்கள் நேர்மையில் கெஜ்ரிவாலை மிஞ்ச முடியாது எனக்கூறியுள்ளது.
ஏற்கனவே, சட்டசபை தேர்தல் காரணமாக ஆம் ஆத்மி காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வருகிறது. கெஜ்ரிவாலை காங்கிரசின் அஜய் மக்கான் கடுமையாக விமர்சித்தார். இதனால், ' இண்டியா' கூட்டணியில் இருந்து காங்கிரசை நீக்க மற்ற கட்சிகளிடம் வலியுறுத்துவோம் என ஆம் ஆத்மி கூறியிருந்தது. தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு, கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து இருந்தனர். அவர்கள் காங்கிரசை கண்டுகொள்ளவில்லை.
தற்போது ராகுலை விமர்சித்து ஆம் ஆத்மி போஸ்டர் ஒட்டியது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.அக்கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பா.ஜ.,வும், ஆம் ஆத்மியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். இரு கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும்இல்லை. அவர்களை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. பா.ஜ.,வின் 'பி' டீமாக ஆம் ஆத்மி உள்ளது. பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி இடையே மறைமுக கூட்டணி உள்ளது. அன்னா ஹசாரே இயக்கத்தை ஆரம்பித்தது யார். அவர்களுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது. இதற்கு பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரசின் அல்கா லம்பா கூறியதாவது: கெஜ்ரிவாலுக்கு தைரியம் இருந்தால், ' இண்டியா' கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன் எனக்கூறட்டும். 100 எம்.பி.,க்களுடன் காங்கிரஸ் வலிமையாக உள்ளது. கெஜ்ரிவால், டில்லியின் 7 எம்.பி.,க்களையும் பா.ஜ.,விடம் கொடுத்தார். லோக்சபா தேர்தலின்போது கூட்டணிக்காக கெஜ்ரிவால் எங்களிடம் பிச்சையெடுத்தார். டில்லியில் 7 தொகுதிகளுக்காக அவருடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் பெரிய தவறை செய்துவிட்டது. இதனால், படுதோல்வியை சந்தித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.