அமேதியில் போட்டியிட ராகுலுக்கு பயம்: பிரதமர் மோடி
அமேதியில் போட்டியிட ராகுலுக்கு பயம்: பிரதமர் மோடி
UPDATED : மே 03, 2024 12:28 PM
ADDED : மே 03, 2024 12:04 PM

கோல்கட்டா: ‛‛ அமேதியில் போட்டியிட பயந்து காங்கிரஸ் இளவரசர்(ராகுல்) ரேபரேலியில் போட்டியிடுகிறார் '' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பர்தமான் - துர்காபூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. ஓட்டுக்காக சமூகத்தை பிரிப்பது மட்டுமே அவர்களுக்கு தெரியும். ஹிந்துக்களை 2 மணி நேரத்தில் ஆற்றில் வீசுவேன் என திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பேசுகிறார். என்ன மாதிரியான அரசியல் கலாசாரம் இது? மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்கு என்ன நடக்கிறது? மாநிலத்தில் ஹிந்துக்களை இரண்டாம் தர மக்களாக திரிணமுல் காங்கிரஸ் நடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியின் பெரிய தலைவருக்கு தேர்தலில் போட்டியிட தைரியமில்லை. ஓடிவிடுவார் என பார்லிமென்டில் பேசினேன். தற்போது அவர், ராஜஸ்தான் சென்று அங்கிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இளவரசரும் வயநாட்டில் தோல்வி அடைவார் என ஏற்கனவே கூறியிருந்தேன். அங்கு தேர்தல் முடிந்ததும், அவர் வேறு தொகுதியை தேடுவார் எனவும் கூறினேன். தற்போது, அவரும் அமேதியில் போட்டியிட பயந்து ரேபரேலி நோக்கி ஓடியுள்ளார். நான் அவர்களிடம், ஓடவும் வேண்டாம், பயப்படவும் வேண்டாம் என கூற விரும்புகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.