நேர்மையற்றவர் ராகுல்; ஆம்ஆத்மியின் போஸ்டரால் காங்கிரஸ் அப்செட்
நேர்மையற்றவர் ராகுல்; ஆம்ஆத்மியின் போஸ்டரால் காங்கிரஸ் அப்செட்
ADDED : ஜன 25, 2025 12:56 PM

டில்லி: டில்லி சட்டசபை தேர்தலையொட்டி, அம்ஆத்மி கட்சியின் டிரெண்டாக்கும் போஸ்டர், காங்கிரஸ் கட்சியினரை அப்செட்டாக்கியுள்ளது.
டில்லி சட்டசபைக்கு வரும் பிப்.,5ம் தேதி தேர்தல் நடக்கிறது. பதிவாகும் ஓட்டுக்கள் பிப்.,8ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்தத் தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் போட்டியிட்டுள்ளன. இண்டியா கூட்டணியில் அங்கம் பெற்றிருந்தாலும், டில்லி தேர்தலில் ஆம்ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களமிறங்கியுள்ளன.
இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஆம்ஆத்மிக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. இது காங்கிரஸூக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், டில்லியில் பிரசாரத்தில் ஈடுபடும், ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள், மாறிமாறி விமர்சனங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வருகின்றனர்.
குறிப்பாக, டில்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேவையில்லாத ஒன்று என்றும், பா.ஜ.,வுடன் மறைமுகமாக கூட்டு வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஆம்ஆத்மி வெளிப்படையாக குற்றம்சாட்டியது.
அதேபோல, காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியும், பிரசாரத்தின் போது கெஜ்ரிவாலை கடுமையாக தாக்கி பேசினார். 'பிரதமர் மோடியைப் போன்று கெஜ்ரிவாலும் போலி வாக்குறுதிகளை கூறி வருகிறார். டில்லி மக்களுக்கு முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் கொடுத்த உண்மையான வளர்ச்சியைக் கொடுக்கும் ஆட்சி தான் தேவை. முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் ஆட்சியை ஷீலா தீக்ஷித் ஆட்சியுடன் ஒப்பிட்டுக் கூட பார்க்க முடியாது,' என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேர்மையற்றவர்கள் என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பா.ஜ.,வினர் இருக்கும் போஸ்டரில், ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரின் புகைப்படத்தையும் சேர்த்து ஆம்ஆத்மி கட்சியினர் டிரெண்டாக்கி வருகின்றனர்.
அந்தப் போஸ்டரோடு, 'நேர்மையற்ற இந்தத் தலைவர்களை காட்டிலும், மிகவும் நேர்மையானவர் கெஜ்ரிவால்,' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இண்டியா கூட்டணியில் மேலும் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.