ராகுல், பிஷ்னோய்! வாயை கொடுத்து வாங்கி கட்டிய பிரபல நடிகர்
ராகுல், பிஷ்னோய்! வாயை கொடுத்து வாங்கி கட்டிய பிரபல நடிகர்
ADDED : அக் 21, 2024 05:48 PM

புவனேஸ்வர்: பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் அடுத்த குறி காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் என்று பதிவை வெளியிட்ட பிரபல ஒடிசா நடிகர் மன்னிப்பு கோரியுள்ளார்.
மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கின் கொலை அரசியலையும் கடந்து பாலிவுட் வரை எதிரொலித்துள்ளது. கொல்லப்பட்ட சித்திக், பாலிவுட் நடிகர் சல்மான்கானின் நெருங்கிய நண்பர் என்பதே இதற்கு காரணம்.
பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பு ஏற்பதாக பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அறிவித்துள்ளது. லாரன்ஸ் பிஷ்னோய் மீது ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிஷ்னோய் என்ற சமூகத்தை சேர்ந்தவர். இவரின் சமூகத்தை சேர்ந்தவர்கள் மான்களின் பாதுகாவலர்களாக செயல்படுகின்றனர். மான் வேட்டையாடிய வழக்கில் சல்மான் கான் சிக்க, அவரை இதே லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் எதிரியாக பாவித்து வருகிறது.
பாபா சித்திக் கொலையை தொடர்ந்து, சல்மான்கானை கொலை செய்ய இதே பிஷ்னோய் கும்பல் திட்டமிட்டு இருப்பதாக மும்பை போலீசாருக்கு தகவல் கிடைக்க, சுக்பீர் பல்பீர் சிங் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் தான் பிஷ்னோய் கும்பலின் அடுத்த குறி என்று பிரபல ஒடிசா நடிகர் புத்ததித்யா மொகந்தி கூறி உள்ளார். அவர் தமது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது;
ஜெர்மனிக்கு கெஸ்டாபோ, இஸ்ரேலுக்கு மொசாட், அமெரிக்காவுக்கு சிஐஏ. தற்போது இந்தியாவுக்கு லாரன்ஸ் பிஷ்னோய். அடுத்த பட்டியலில் ஓவைசி மற்றும் ராகுல்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறி இருந்தார்.
நடிகர் புத்ததித்யா மொகந்தி பதிவு பெரும் சர்ச்சையாக, பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. போலீசில் அவருக்கு எதிராக புகார்கள் குவிந்தன. விவகாரம் வேறுதிசையில் பயணிப்பதை உணர்ந்த நடிகர் புத்ததித்யா மொகந்தி தமது பதிவுக்கு மன்னிப்பு கோரி, தாம் வெளியிட்ட அந்த எக்ஸ் தள பதிவையும் நீக்கி உள்ளார்.

