அமைதியை இழந்த ராகுல் கோர்ட்டில் மன்னிப்பு கேட்பார்: மத்திய அமைச்சர்
அமைதியை இழந்த ராகுல் கோர்ட்டில் மன்னிப்பு கேட்பார்: மத்திய அமைச்சர்
ADDED : ஜன 24, 2024 01:04 PM

பாட்னா: 'அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் புகழால் ராகுல் அமைதியை இழந்துவிட்டார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார்' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் முதல், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை வரையில், காங்., - எம்.பி., ராகுல் மேற்கொண்டுள்ள பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை, அசாமில் இருந்து மேகாலயாவுக்குள் சென்று, நேற்று மீண்டும் அசாம் மாநிலத்துக்குள் நுழைந்தது. இந்த யாத்திரை அசாமின் கவுஹாத்தி நகருக்குள் நுழைய மாநில அரசு ஏற்கனவே அனுமதி மறுத்து இருந்தது.
பொது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், புறநகர் பகுதி வழியாக யாத்திரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ராகுல் தலைமையிலான காங்., தொண்டர்கள், கவுஹாத்தி நகரத்துக்குள் யாத்திரை மேற்கொள்ள நேற்று முயன்றனர்.
இதனால், போலீசார் அமைத்த தடுப்புகளை அடித்து நொறுக்கிவிட்டு கவுஹாத்தி நகருக்குள் நுழைய காங்., தொண்டர்கள் முயற்சித்தனர். இதில் போலீசார் உட்பட பொதுமக்கள் சிலரும் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி, யாத்திரையை திட்டமிட்ட பாதைக்கு திருப்பி விட்டனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில், ''ராகுல் மற்றும் காங்., தலைவர் ஜிதேந்திரா சிங் மக்களை தூண்டிவிட்டு போலீசார் அமைத்த தடுப்புகளை அடித்து நொறுக்கியுள்ளனர். அசாம் போலீஸ் அதிகாரியை கொல்லும்படி தொண்டர்களை அவர்கள் தூண்டிவிட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யும்படி டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டுள்ளதாக'' அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்திருந்தார்.
ஆனால், எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பயப்பட மாட்டேன்'' என ராகுல் கூறியிருந்தார். இது குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், ''அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் புகழால் ராகுல் அமைதியை இழந்துவிட்டார். அவர் விரைவில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பார்'' என்றார்.

