ADDED : ஆக 14, 2024 06:33 PM

புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவை, எதிர்க்கட்சி தலைவரான பிறகு ராகுல் முதல்முறையாக சந்தித்து பேசினார்.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு, ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யான ராகுல் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றார். நாளை( ஆக.,15) சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ராகுல் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
தோல்வி ஏன்?
முன்னதாக ராகுல் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கோல்கட்டாவில் இளம் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவத்தை கண்டு ஒட்டு மொத்த தேசமும் அதிர்ச்சி அடைந்துள்ளது.அவர் கொலை செய்யப்பட்ட விதம் வெளியாகி உள்ள நிலையில் டாக்டர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற நிலை உருவாகி உள்ளது.
பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்காமல், குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் நடவடிக்கை உள்ளூர் நிர்வாகம் மற்றும் மருத்துவமனை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றச்சம்பவங்களை தடுக்க அனைத்து கட்சிகள், சமூகத்தினர் இணைந்து தீவிரமான ஆலோசனை செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ கல்லூரிகளில் டாக்டர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால், பெண் குழந்தைகளை படிக்க வெளியூர் அனுப்புவார்களா என்ற சந்தேகத்தை நமக்கு ஏற்படுத்தி உள்ளது. நிர்பயா சம்பவத்திற்கு பிறகு இயற்றப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களை தடுப்பதில் தோல்வி அடைந்தது ஏன்? இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.

