ADDED : டிச 10, 2024 12:14 AM

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக பா.ஜ.,வின் ராகுல் நர்வேகர், 47, போட்டியின்றி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த மாதம் 20ல் நடந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான மஹாயுதி கூட்டணி 230 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
நீண்ட இழுபறிக்கு பின், மாநில முதல்வராக பா.ஜ., மூத்த தலைவர் தேவேந்திர பட்னவிஸ் கடந்த 5ம் தேதி பதவியேற்றார்.
சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்.,கின் அஜித் பவார் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், மஹாராஷ்டிரா சட்டசபையின் சபாநாயகர் தேர்தல் நேற்று நடந்தது.
முன்னதாக, கொலாபா சட்டசபை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்ற ராகுல் நர்வேகர், சபாநாயகர் தேர்தலில் போட்டியிட நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இவரை எதிர்த்து, வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக ராகுல் நர்வேகர் போட்டியின்றி நேற்று தேர்வானார்.