அமேதி, ரேபரேலியில் போட்டியிடுவது ராகுல், பிரியங்காவின் தனிப்பட்ட விருப்பம்: ஜெய்ராம் ரமேஷ்
அமேதி, ரேபரேலியில் போட்டியிடுவது ராகுல், பிரியங்காவின் தனிப்பட்ட விருப்பம்: ஜெய்ராம் ரமேஷ்
ADDED : மே 02, 2024 01:45 PM

புதுடில்லி: ''அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் முறையே ராகுல், பிரியங்கா போட்டியிடுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம், அதனை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த இரு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர்'' என காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் நான் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தற்போது எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்ற வரம்பு உள்ளது. இந்த 50 சதவீத வரம்பை நீங்கள் நீக்குவீர்களா இல்லையா? நாங்கள் இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை உயர்த்துவோம் என எங்களின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக கூறியுள்ளோம்.
ராகுல் - பிரியங்கா
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என நம்புகிறேன். அமேதியில் ராகுலும், ரேபரேலியில் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அவர்கள் இருவரும் நாடுமுழுவதும் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர். இருவரும் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளர்கள்; ஆனால் காங்., தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் அவர்கள் இந்த இரு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என விரும்புகின்றனர். இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்; அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
முதல்கட்ட தேர்தலுக்கு பிறகு தெற்கில் பா.ஜ., முழுமையாகவும், வடக்கில் பாதியிலும் தோல்வி அடையும் என்பது தெளிவாகிவிட்டது. 2ம் கட்ட தேர்தலில் மிகப்பெரிய அளவில் பா.ஜ., 'சீட்'கள் குறைந்துவிடும். இந்த இரு கட்ட தேர்தலை பொறுத்தவரை இண்டியா கூட்டணி குறிப்பிட்ட அளவிலான இடங்களில் வெற்றிப்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

