அதானி விவகாரத்தில் விவாதம் தேவை; மீண்டும் சொல்கிறார் ராகுல்
அதானி விவகாரத்தில் விவாதம் தேவை; மீண்டும் சொல்கிறார் ராகுல்
ADDED : டிச 11, 2024 02:35 PM

புதுடில்லி: 'அதானி விவகாரத்தில் மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. பார்லிமென்டில் நிச்சயம் விவாதம் தேவை,' என காங்கிரஸ் எம்.பி.,யும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் கூறினார்.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டில்லியில் நிருபர்கள் சந்திப்பில் ராகுல் கூறியதாவது: அதானி விவாகரத்தில் மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. பார்லிமென்டில் நிச்சயம் விவாதம் தேவை. தொழிலதிபர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விவாதம் நடத்துவதை பா.ஜ., விரும்பவில்லை. இதை நாங்கள் விடமாட்டோம். அவர்கள் எங்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே இருப்பார்கள்.
விவாதம்
சபாநாயகரை சந்தித்து பேசினேன். என் மீதான கீழ்த்தரமான கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினேன். சபாநாயகர் அதை பரிசீலிப்பதாக கூறினார். சபை இயங்க வேண்டும், சபையில் விவாதம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இல்லை. என்னைப் பற்றி அவர்கள் என்ன சொன்னாலும், விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவையை சுமூகமாக நடத்த, ஒத்துழைக்கவே விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

