3 மாசம் முன்னாடி தலை, தாடியில் கை வைத்த நபர்! இப்போது 'சர்ப்ரைஸ்' தந்த ராகுல்
3 மாசம் முன்னாடி தலை, தாடியில் கை வைத்த நபர்! இப்போது 'சர்ப்ரைஸ்' தந்த ராகுல்
ADDED : செப் 14, 2024 10:18 AM

ரேபரேலி; தமக்கு முடித்திருத்தம் செய்த சவர தொழிலாளிக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் பரிசு அனுப்பி உள்ளார்.
லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி., ஆனார். அந்த தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, அவர் அங்குள்ள பிரிஜேந்திர நகர் என்ற பகுதியில் ஓட்டு சேகரித்தார்.
அங்கு முடி திருத்தகம் நடத்தி வரும் மிதுன் என்பவரின் கடைக்குச் சென்று அவரிடம் தமது தலைமுடியையும், தாடியையும் திருத்தம் செய்து கொண்டார். பின்னர் அவரிடம் நீண்ட நேரம் ராகுல் உரையாடினார். இந்த நிகழ்வு நடந்து 3 மாதங்கள் கழிந்துள்ள நிலையில், தற்போது மிதுனுக்கு ராகுல் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து முடி திருத்தக உரிமையாளர் மிதுன் கூறியதாவது; தமது கடையின் முன்பு திடீரென ஒரு வாகனம் வந்து நின்றது. அதில் இருந்த 2 பேர் இந்த பரிசுத்தொகுப்பை ராகுல் அனுப்பி இருப்பதாக கூறி தந்துவிட்டுச் சென்றனர். அதில், 2 நாற்காலிகள், இன்வெட்டர் உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தன.
இவ்வாறு மிதுன் கூறினார்.
இதுபற்றி ரேபரேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி கூறியதாவது; பரிசுத் தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்ட விவரம் சமூக வலைதளங்கள் மூலம் வந்து சேர்ந்தது. இது மிகவும் நல்ல விஷயம் என்று கூறினார்.
