ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் பாஜ., மனு
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் கமிஷனில் பாஜ., மனு
ADDED : அக் 30, 2025 06:19 PM

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும். அவர் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் பாஜ புகார் அளித்துள்ளது.
பீஹார் சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்டமாக நவ., 6 ல் 121 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 59 நாட்களாக பீஹார் பக்கமே வராத காங்கிரஸ் எம்பி ராகுல், நேற்று முதல் பிரசாரத்தை துவக்கினார். தர்பங்காவில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில், '' ஓட்டுக்காக பிரதமர் மோடி எந்தவிதமான நாடகத்தையும் அரங்கேற்றுவார். நடனம் ஆடினால் தான் உங்களுக்கு ஓட்டுப்போடுவேன் என கூறி பாருங்கள்.உடனடியாக அவர் பரத நாட்டியமே ஆடுவார்,'' எனக்கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜ., '' உள்ளூர் பேட்டை ரவுடி பேசனிால் எப்படி இருக்குமோ அதுபோல இருக்கிறது ராகுலின் பேச்சு. ரவுடியைப் போல பேசி பிரதமரை இழிவுபடுத்திப் பார்க்கும் ராகுலின் இத்தகைய அணுகுமுறை ஏற்படையது அல்ல. கண்டனத்திற்குரியது பிரதமரை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு, ஓட்டுப் போடும மக்களையும் நாட்டின் ஜனநாயகத்தையும் ராகுல் இழிவுபடுத்துகிறார்,'' எனத் தெரிவத்து இருந்தது.
இந்நிலையில், மாநில தேர்தல் அதிகாரியிடம் பீஹார் மாநில பாஜ அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பொது பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றை மீறி, பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல், அவதூறு பரப்பும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசி உள்ளார். அவருக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்ணியத்தை பாதுகாக்க குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் பாஜ கூறியுள்ளது.

