ஜார்க்கண்டில் போராடும் மாணவர்களுக்கு ராகுல் ஆதரவு; சந்தித்து பேச முதல்வருக்கு கோரிக்கை
ஜார்க்கண்டில் போராடும் மாணவர்களுக்கு ராகுல் ஆதரவு; சந்தித்து பேச முதல்வருக்கு கோரிக்கை
ADDED : ஆக 17, 2026 02:24 PM

ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசு நடத்திய தேர்வில் நடந்த முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து பேசுமாறு முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மூன்று தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. எனவே, தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் இணைந்து, 20 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும், டில்லியில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா அமைப்பினர் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததுபோல், தங்களுடைய போராட்டத்துக்கும் ராகுல் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதுமட்டுமில்லாமல், தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால், முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்; ஜார்க்கண்டில் அரசு நடத்திய தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுகிறது. அதற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். இந்தியக் கல்வி முறை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவால் கைப்பற்றப்பட்டு, மாணவர்களை ஒடுக்கும் கருவியாக மாற்றப்பட்டுவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வலுவான அமைப்பாக தற்போது இல்லை.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழுவை அமைத்த ஜார்க்கண்ட் அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை முதல்வர் நேரில் சந்திக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகளை கேட்டு, அதனை நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
