'வாழ்க அரசியலமைப்பு' என்று கூறி எம்.பி., பதவியேற்ற ராகுல்; சர்ச்சையை ஏற்படுத்திய ஓவைசி
'வாழ்க அரசியலமைப்பு' என்று கூறி எம்.பி., பதவியேற்ற ராகுல்; சர்ச்சையை ஏற்படுத்திய ஓவைசி
UPDATED : ஜூன் 25, 2024 04:59 PM
ADDED : ஜூன் 25, 2024 04:40 PM

புதுடில்லி: ரேபரேலி தொகுதியிலிருந்து எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல், லோக்சபாவில் பதவியேற்பின்போது 'வாழ்க அரசியலமைப்பு' என்ற கோஷமிட்டார். ஐதராபாத் தொகுதி எம்.பி., ஓவைசி பதவியேற்பின்போது 'வாழ்க பாலஸ்தீனம்' என முழங்கியது சர்ச்சையாகியுள்ளது.
18வது லோக்சபா தேர்தலில் வெற்றிப்பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் இன்று (ஜூன் 25) வரிசையாக பதவியேற்றனர். சிலர் உறுதிமொழி எடுத்துக்கொண்டதும் ஒவ்வொரு விதமாக முழக்கங்களை எழுப்பினர். ரேபரேலி தொகுதியில் வென்ற காங்கிரஸ் எம்.பி., ராகுல் கையில் அரசியலமைப்பு புத்தகத்துடன் பதவியேற்றுக்கொண்டார். உறுதிமொழி படிவத்தை வாசித்து முடித்ததும் 'ஜெய்ஹிந்த், ஜெய் சம்விதான் (வாழ்க அரசியலமைப்பு)' என்று முழக்கமிட்டார்.
ஐதராபாத் தொகுதியில் வென்ற ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைசி பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டதும், 'ஜெய் பாலஸ்தீனம்' என முழக்கமிட்டார். இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே போர் நடந்து வரும் சூழலில் வாழ்க பாலஸ்தீனம் என முழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓவைசி, ''ஒவ்வொருவரும் பல விஷயங்களை கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் மீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் எனக் கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் உள்ள விதியை காட்டுங்கள்'' என்றார்.