பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமையாக இருப்பது அவசியம்: ராகுல்
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமையாக இருப்பது அவசியம்: ராகுல்
UPDATED : ஏப் 25, 2025 05:01 PM
ADDED : ஏப் 25, 2025 04:34 PM

ஸ்ரீநகர்; பயங்கரவாதததை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறி உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ராகுல் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது;
என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும்,உதவி செய்யவும் நான் இங்கு வந்துள்ளேன். ஜம்மு காஷ்மீரின் ஒட்டு மொத்த மக்களும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர். அவர்கள் தேசத்துக்கு முழுமையான ஆதரவை அளித்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களில் ஒருவரை நான் சந்தித்தேன். குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிப்பவர்ளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த நாடும் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன்.
அரசுடன் பேசி உள்ளோம். ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஆதரிக்கிறோம். சமூகத்தை பிளவுப்படுத்தி, சண்டையிட வைப்பதே தாக்குதலின் பின்னணியில் உள்ள எண்ணம். இதை தோற்கடிக்க நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
காஷ்மீர் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த எனது சகோதர, சகோதர்களை சிலர் தாக்குவதை பார்ப்பது வருத்தத்தை அளிக்கிறது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருந்து, பயங்கரவாதத்தை முற்றிலும் தோற்கடிப்பது முக்கியம் என நான் நினைக்கிறேன்.
முதல்வரையும், துணைநிலை கவர்னரையும் சந்தித்தேன். அவர்கள் என்ன நடந்தது என்பது குறித்து என்னிடம் விளக்கினர். நானும் எனது கட்சியும் அவர்களுக்கு முழு ஆதரவளிப்போம் என்று உறுதி அளித்தேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

