வயநாட்டில் சுற்றுலாவை மீட்டெடுக்க ராகுல் விருப்பம்
வயநாட்டில் சுற்றுலாவை மீட்டெடுக்க ராகுல் விருப்பம்
ADDED : செப் 01, 2024 05:45 PM

புதுடில்லி: '' நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்க வேண்டும்'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., பொதுச்செயலர் பிரியங்கா ஆகியோர் கேரள மாநில காங்., நிர்வாகிகளுடன் கலந்துரையாடினர். அப்போது நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நடந்து வரும் நிவாரண பணிகள் குறித்தும், சுற்றுலா துறை குறித்தும் கலந்துரையாடினர்.
இதனையடுத்து 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ராகுல் கூறியதாவது: மோசமான நிலச்சரிவினால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து வயநாடு படிப்படியாக மீண்டு வருகிறது. அங்கு இன்னும் நிறைய பணிகள் செய்ய வேண்டியிருக்கும். நிவாரணப் பணிகளில் அனைத்து சமுதாயம் மற்றும் அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வயநாடு மக்களுக்கும் பெரிதும் உதவக்கூடிய முக்கிய அம்சமான சுற்றுலாவை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன். மழை ஓய்ந்த உடன் வயநாட்டில் சுற்றுலாத் துறையை மீட்டெடுத்து மக்கள் வருகையை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சியை நாம் மேற்கொள்ள வேண்டும். நிலச்சரிவு ஏற்பட்டது வயநாட்டில் உள்ள குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே. முழு ஊரிலும் அல்ல. பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் கொண்ட சுற்றுலா தளமான வயநாடு விரைவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கும் பயணிகளை ஈர்க்கத் தயாராகும். அழகான வயநாட்டில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு கடந்த காலத்தைப் போலவே மீண்டும் ஆதரவை வழங்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.