ADDED : பிப் 17, 2024 04:38 AM
பெங்களூரு : ''பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல், ஜாதி நிந்தனை செய்துள்ளார். அவருக்கு புத்தியே வராது,'' என, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி சாடினார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் ஜாதியை பற்றி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். ஏற்கனவே இப்படி பேசி, இரண்டு ஆண்டு சிறை தண்டனைக்கு ஆளானார். தண்டனைக்கு 'தற்காலிக ஸ்டே' வாங்கியுள்ளார். உச்சநீதிமன்றமும் கூட, தண்டனைக்கு தடை விதிக்கும்போது, தெளிவாக கூறியது.
'யார் தங்களை தலைவர் என, நினைக்கிறாரோ அவர் வார்த்தைகளை பயன்படுத்தும்போது, கவனமாக இருக்க வேண்டும். நாக்கை கட்டுக்குள் வைக்க வேண்டும்' என அறிவுறுத்தியது.
ராகுலுக்கு மக்களே பாடம் கற்பித்துள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதை போன்று, இது போன்று பேசினால், இம்முறை லோக்சபா தேர்தலில் 40க்கும் குறைவான தொகுதிகளை பெறுவர்.
ஒரே கொள்கை, இரண்டு தேர்தல்களில் பொருந்தாது. தேசிய அளவில் எங்கெங்கு மாற்றம் செய்ய வேண்டுமோ, அங்கங்கு மாற்றம் செய்வர். தகுதியானவர்களுக்கு கட்சி மேலிடம் சீட் கொடுக்கும்.
குண்டர்கள் எந்த கட்சியில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியும். சட்டசபையில் இந்த வார்த்தையை சித்தராமையா பயன்படுத்தியது, அவரது கலாசாரத்தை காண்பிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.