UPDATED : ஜன 14, 2024 01:45 AM
ADDED : ஜன 14, 2024 01:35 AM

புதுடில்லி: காங்., எம்.பி.ராகுல் இரண்டாம் கட்டமாக பாரத் ஜோடோ நீதி யாத்திரையை இன்று மணிப்பூரில் துவக்குகிறார்.
கடந்த 2022 செப்., 7ம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில், பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் காங்., - எம்.பி., ராகுல் நடைபயணம் மேற்கொண்டார். இது, 2023 ஜன., 30ல் காஷ்மீரில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து வரப்போகும் லோக்சபா தேர்தலையொட்டி வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரை, பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்ற நடைபயணத்தை, இன்று 14ம் தேதி ராகுல் துவங்குகிறார்.
மொத்தம் 6,713 கி.மீ., துாரம் கொண்ட இந்த யாத்திரை, 100 லோக்சபா தொகுதிகள் மற்றும் 337 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையை, மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. மணிப்பூர் அரசு மறுத்தது.
இந்நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன், ஹப்டா கங்ஜெய்புங் மைதானத்தில், பாரத் ஜோடோ நீதி யாத்திரையை துவங்க, மணிப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து இன்று 12 மணிக்கு யாத்திரையை ராகுல் துவங்குகிறார்.

