பிசுபிசுக்கும் பிரசாரம்: தேஜஸ்விக்கு தெரிந்தது ராகுலுக்கு தெரியலையே!
பிசுபிசுக்கும் பிரசாரம்: தேஜஸ்விக்கு தெரிந்தது ராகுலுக்கு தெரியலையே!
UPDATED : ஆக 03, 2025 08:21 AM
ADDED : ஆக 03, 2025 05:22 AM

பாட்னா: பீஹாரில் வாக்காளர் பட்டியல் தீவிர சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இறந்தவர்கள், இடம் மாறியவர்களின் பெயர்களை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்தாண்டு, நவம்பரில் பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தன.
இந்த போராட்டத்தை முதலில் துவங்கியது, லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ். ஆனால், அவரோ இப்போது இந்த விஷயத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். காரணம், 'இந்த போராட்டத்தால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை. பீஹார் வாக்காளர்கள் மத்தியில், இதற்கு ஆதரவும் இல்லை. இந்த போராட்டத்தை வைத்து, வாக்கு வாங்க முடியாது' என, லாலுவின் கட்சி தலைவர்கள் கூறியதால், தேஜஸ்வி யாதவ் வாக்காளர் பட்டியல் தீவிர ஆய்வைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டா ர்.
ஆனால், ராகுலோ, தினமும் இதைப் பற்றி பேசுவதுடன், 'பெங்களூரு மத்திய பார்லிமென்ட் தொகுதியிலும், தேர்தல் கமிஷன் தில்லு முல்லு செய்துள்ளது. இதனால், இங்கு காங்., வேட்பாளரும், துணை முதல்வர் சிவகுமாரின் சகோதரருமான சுரேஷ்குமார் தோல்வி அடைந்தார்' என, தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், 'இதெல்லாம் சுத்த பொய்' என, ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
'இந்த விவகாரத்தை வைத்து பிரசாரம் செய்தால் வேலைக்கு ஆகாது என்பதை, தேஜஸ்வி யாதவ் புரிந்து கொண்டாலும், ராகுல் புரிந்து கொள்ளவில்லையே...' என பீஹார் காங்கிரசார் வருத்தப்படுகின்றனர்.

