UPDATED : பிப் 16, 2025 08:48 AM
ADDED : பிப் 16, 2025 08:38 AM

புதுடில்லி: '' டில்லியில் நடந்த விபத்தானது, ரயில்வேயின் தோல்வியையும், அரசின் உணர்வின்மையையும் எடுத்துக் காட்டுகிறது,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
உ.பி., மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் கும்பமேளாவிற்கு செல்வதற்காக நேற்று இரவு டில்லி ரயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் காயமடைந்துள்ளதாகவும் வரும்செய்தி வருத்தமளிக்கிறது. இச்சம்பவமானது, ரயில்வேத்துறையின் தோல்வியையும், அரசின் உணர்வின்மையையும் எடுத்துக்காட்டுகிறது.
பிரயாக்ராஜ் நகருக்கு அதிகளவு பக்தர்கள் செல்வதை கருத்தில் கொண்டு, ரயில் நிலையத்தில் சிறந்த வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கார்கே வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், '' ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளிக்கிறது. அங்கிருந்து வரும் காணொளிகள் மனதிற்கு வேதனை அளிக்கிறது. இ்ங்கு ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான உண்மையை மறைக்க மோடி அரசு மேற்கொண்ட முயற்சி வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பதவில் கார்கே கூறியுள்ளார்.