UPDATED : மே 23, 2025 03:10 AM
ADDED : மே 23, 2025 03:03 AM

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்திற்குள் முன் அறிவிப்பின்றி லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் காங்., எம்.பி.,யுமான ராகுல் சென்றதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.
நேற்று ராகுல் திடீரென டில்லி பல்கலை.க்கழகத்திற்கு நுழைந்தார். அவரது வருகை குறித்து பல்கலை. நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. முன்அறிவிப்பின்றி ராகுல் பல்கலை.க்குள் நுழைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பல்கலை.க்குள் நுழைந்ததும் டில்லி பல்கலை. மாணவர் சங்கத்தினரை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்துரையாடியதாகவும் கூறப்படுகிறது.
ராகுலின் இந்த செயலுக்கு பா.ஜ., மற்றும் என்.எஸ்.யு.ஐ. எனப்படும் தேசிய மாணவர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னறிவிப்பின்றி பல்கலை.க்குள் நுழைவது சட்டவிரோதம் எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு இதே போன்று 2023ம் ஆண்டு மே மாதம் இப்பல்கலை.க்குள் முன்னறிவிப்பு இன்றி ராகுல் வருகை தந்ததாகவும் பா.ஜ.,வைச் சேர்ந்த நிர்வாகி கூறினார். ராகுல் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்கலை. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.